Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, December 11, 2010

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 6

உடை மற்றும் உணவு மூலம் இருக்கும் விரதம் உங்களின் உடல் என்னும் தளத்தில் வேலை செய்யும் என்றால் பழக்க சூழலில் இருக்கும் விரதம் மனம் என்ற தளத்தில் வேலை செய்யும்.

உடலும் மனமும் தூய்மை ஏற்பட்டால் எப்பொழுதும் சுய தூய்மையுடன் விளங்கும் ஆன்மாவை காண முடியும் என்பதே இதன் அடிப்படை. பழக்கங்கள் என நான் இங்கே கூறுவது வாழ்வியல் முறைகளைத்தான்.

எப்படி விரதகாலத்தில் நடந்துகொள்வது என்பது மிக முக்கியம். சாஸ்தா விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்களை கீழே குறிப்பிடுகிறேன்.

தினமும் இரண்டு வேளை கட்டாயம் குளிக்க வேண்டும். உணவு அருந்தும் முன் குளித்திருப்பது அவசியம். காலை 4 முதல் 5 க்குள் அல்லது மாலை 5 முதல் 6க்குள் குளிக்க வேண்டும்.

சோப் போன்ற கெமிக்கல் வஸ்துக்களை பயன்படுத்தாமல் மண் அல்லது காய்ந்த பசும் சாணத்தை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் மற்றும் ஷாம்புக்கள் கேசங்களில் பயன்படுத்தக்கூடாது.

கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. சந்தனம் குங்குமம் வைப்பது உங்களின் விருப்பம்.

செருப்பு மற்றும் காலணிகள் கட்டாயம் கூடாது. இரவு 9 முதல் காலை 4 மணி வரைக்குமே தூங்குவதற்கான நேரம். படுக்கை மற்றும் தலையணை பயன்படுத்தாமல், ஒரு துணியை மட்டுமே விரித்து அதில் தலையணையில்லாமல் படுக்க வேண்டும். மிகவும் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் கெட்டியான கம்பளியை விரிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் மெத்தையை முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. இடுப்பில் கட்டிய வேஷ்டி போக உடலில் போர்த்திய வேஷ்டியை தூங்கும் பொழுது போர்வையாக பயன்படுத்தலாம். உங்களின் கைகளை விட வேறு நல்ல தலையணை தேவையா?

புகைப்பழக்கம் உள்ளவர்கள் தற்காலத்தில் விரதம் இருக்கும் பொழுது புகைப்பிடிப்பதை பார்க்கிறோம். கேவலமாக விரதம் இருப்பவர்களுக்கு இவர்களை விட உதாரணம் சொல்ல முடியாது. தங்களிடம் உள்ள சின்ன பழக்கத்தை விட முடியாத அளவுக்கு மிகவும் தரம் குறைந்த வைராக்கியம் கொண்டவர்கள்.

ஒரு மதபோதகரிடம் ஒரு இளைஞர் கேட்டான், “ஐயா புகைபிடிப்பது தவறா?”
போதகர் சொன்னார், “மிகவும் கொடிய பாவம். புகைப்பிடிப்பவன் நரகம் அடைவான்”
மற்றொரு இளைஞர் போதகரிடம் கேட்டான், “ஐயா நான் தொடர்ந்து புகைப்பிடிப்பவன், புகைப்பிடிக்கும் பொழுது எல்லாம் இறைவனை தொடர்ந்து நினைக்கிறேன். இது சரியா?”
போதகர் சொன்னார், “இறைவனை நினைக்கும் எந்த காரியமும் தவறில்லை”

இப்படிபட்ட பக்தர்களும் அவர்களை வழிநடத்துபவர்களும் கொண்ட உலகம் இது. போதகருக்கு இறைவனை நினைக்க வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இளைஞனுக்கோ புகைப்பிடித்தல். இருவரும் ஒரு புள்ளியில் தங்களின் சுயநலத்தை இணைக்கிறார்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் நீங்கள் விரத்தத்தை உங்களின் சுகபோகத்திற்கு தக்க வளைக்கலாம், அதனால் நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை. இழப்பது தான் அதிகம்.

விரத காலத்தில் ஆண்டவன் என்ற பெரிய இலக்கை அடைய தங்களின் சின்ன விஷயங்களை விட தயாராகாதவர்கள், வாழ்க்கையில் பெரிய இலக்கை சின்ன சுக போகத்தால் நழுவ விடுவார்கள் என்பது நிச்சயம்...!

இப்படி விரதகாலத்தை பற்றி கூறுகிறீர்களே இது எந்த புத்தகத்தில் இருக்கிறது? இதை யார் வரையறுத்தது என நீங்கள் கேட்கலாம்.

இந்த வழிமுறை துறவு என்ற நிலையின் அடிப்படை. ஆத்மாஸ்ரமம் என்ற துறவு நிலையே விரதமாக சபரிமலை விரதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இம்முறை மிக உயர்ந்த யோக வாழ்க்கையின் துறவு நிலை.

நாம் இனிப்பு கடைக்கு சென்று அங்கே விற்கும் இனிப்புகளை வாங்கலாமா இல்லையா என குழப்பம் வரும் சமயம் கடைக்காரர் ஒரு பீஸ் இனிப்பை நமக்கு தருவார். அதன் சுவை நன்றாக இருந்தால் அதை வாங்குவோம் அல்லது விட்டு விடுவோம் அல்லவா?

அதுபோல நம் கலாச்சாரத்தில் துறவு என்பது கட்டாயமாக்கப்படவில்லை. இரண்டு மாதம் அப்ரண்டிஸ்ஸாக இருந்துபார். இது பிடித்திருக்கிறதா என்றால் இதையே வாழ்க்கையாக்கிக்கொள் என்கிறது சபரிமலை சாஸ்தா விரதம்.

அப்ரண்டிஸ்ஸாக இருக்கும் காலத்திலேயே தன்னையும் பிறரையும் ஏமாற்றுபவர் முழுமையான வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தால் என்ன செய்வார் என புரிகிறதா? இதற்கு ஆக சிறந்த உதாரணம் சமீப செய்தியான விடியோனந்தாவை கூறலாம்.

பலர் இந்த தொடரை படித்துவிட்டு சபரிமலை யோகியின் இருப்பிடம் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அங்கே பல சன்னதிகளும், சடங்குகளும் நடைபெறுகிறதே என கேட்கிறார்கள்.

68 வருடங்களுக்கு முன்னால் சபரிமலை எப்படி இருந்தது என்ற புகைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது பாருங்கள். திருவாங்கூர் ராஜா தான் சபரிமலைக்கு செல்லும் பொழுது 1948ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் இது.


சபரிமலை கோவிலின் அளவை பாருங்கள். தற்சமயம் இருப்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது புரியும். மிக எளிய, தனிமை நிறைந்த ஏகாந்தமான இடமாக இருந்திருக்கிறது சபரிமலை.

தற்சமயம் நிலையை இப்படத்துடன் ஒப்பிட்டால் மனம் கலங்குகிறது. இச்சூழலை திரும்ப அனுபவிப்பதற்காக விஞ்ஞானிகள் கால இயந்திரத்தை கண்டறிந்தால் மகிழ்வேன். கோவிலை சுற்றி இருக்கும் மரங்களையும் அதன் வளர்ச்சியையும் பாருங்கள். என்னவென்று சொல்ல?

கட்டுகட்டுவது என்றால் என்ன?

சிலர் அன்னதானத்தை ஒரு கட்டுகட்டிவிட்டு செல்லுவார்கள் அதை சொல்லவில்லை. :))

சபரிமலைக்கு கட்டு கட்டி செல்லுகிறார்களே இது ஏன்?

(சரணம் தொடரும்)

Tuesday, December 7, 2010

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 5

நம்மிடையே அனேகர் ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன் என தன்னை தானே ஏமாற்றிக்கொள்பவர்கள். போலி சாமியார்கள் என பத்திரிகைகளில் பலர் எழுதுகிறார் அல்லவா? ஆனால் போலி பக்தர்கள் பற்றி யாரும் எழுதுவதில்லை. காரணம் பெரும்பான் மையானவர்கள் இத்தகையவர்களே. இவர்களை பற்றி சில கருத்துக்களை கூறினால் இவர்களை நீங்கள் அடையாளம் காண உதவும்.

கொல்லிமலைக்கு போயிருக்கேன், காளகஸ்திக்கு போயிருக்கேன், கைலாஷ் பார்த்தாச்சு என்பார்கள். சரி இத்தனை கோவில் போனையே அதனால் உனக்கு என்ன ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டது என கேட்டால் அவ்வளவு தான், திருஞான சம்பந்தரும் இப்படித்தான் கோவில் கோவிலா போனாரு என திருஞான சம்பந்தரை அசிங்கப்படுத்துவார்கள்.

தாங்கள் ஆன்மீகவாதி தான் என்றும் தான் கடினமாக ஆன்மீக பயிற்சிகளை செய்வதாகவும் நினைத்துக்கொள்வார்கள். இன்னும் எளிமையாக சொன்னால், “ஸ்வாமி உங்களை விட நான் கடினமாக முயற்சிக்கிறேன் இன்னும் ஏன் எனக்கு ஞானம் வரலை?” என கேட்பார்கள். இதில் உள்ள குயுக்தி என்னவென்றால் எனக்கே வரலையே உனக்கு எல்லாம் எங்க ஞானம் வந்திருக்கும் என்பதே பொருள்.

சில நேரங்களில் அவர்களின் கடுமையான ஆன்மீக பயிற்சி பற்றி பேசுவார்கள். கடந்த பத்து நாட்களாக கடுமையாக விரதம் இருக்கிறேன் என்பார்கள். ஓ அப்படியா, எப்படிப்பட்ட விரதம் என்றால், காலையில் 4 செவ்வாழையும் ஒரு டம்ளர் பால் மட்டும் தான். மதியம் இரவு மட்டும் தான் சாப்பாடு என்பார்கள். இது தான் அந்த கடினமான விரதம். அப்ப விரதம் இருக்கிறதா சொன்னீங்களே அது எப்போனு கேட்டால் இவர்களுக்கு கெட்ட கோவம் வரும் :)

பிரதோஷ விரதம் இருக்கிறேன் பேர்வழி என காலை மதியம் சாப்பிட மாட்டார்கள். மாலை 6 மணிக்கு தரிசனம் முடிந்ததும் நேராக ஹோட்டலுக்குள் சென்றார்கள் என்றால் வேறுயாருக்கும் உணவு கிடைக்காது. இதன் பெயர் பிரதோஷ விரதமாம்.

இப்படி விரதம் என்பதே தெரியாமல் உண்மையான விரதத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவர்கள்..! இப்படிபட்ட ஆட்கள் தான் நம்மில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சபரிமலை விரதம் இருந்தால் எப்படி இருக்கும்?

ஐயப்பனுக்கு விரதம் இருப்பது என்பது பக்தி என்பதை கடந்து உங்களின் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் விரதமாகும். வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவ்விரதத்தை சரியான வழிமுறை அறிந்து பின்பற்றினால் நிச்சயம் உங்களின் வாழ்க்கை அமைப்பில் மாறுதல் இருக்கும்.

பலருக்கு இந்த விரத முறையின் அடிப்படை தெரியாமல் தாங்கள் வகுத்து கொண்டதே விரத முறை என இருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானது போல விரதத்தின் அடிப்படையை வளைத்துக் கொள்கிறார்கள். நாளடைவில் விரதங்களின் தன்மையும் அதனால் ஏற்படும் பயனும் நீர்த்துப்போய்விடுகிறது.

சாஸ்தா விரதத்தை பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.

விரதம் 48 நாட்கள் இருக்க வேண்டும். பலர் இதை 45 நாள் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல. 48 நாள் என்பதே ஒரு மண்டலம். மண்டலத்தின் துவக்கத்தில் மாலை அணிந்து, தினமும் அணியும் உடை களைந்து கருப்பு அல்லது நீல வண்ண உடை அணிந்து கொள்ள வேண்டும்.

சாஸ்தாவிற்கு விரதம் இருப்பது என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. உடை, உணவு, பழக்க முறை என மூன்று தளங்களில் விரதம் அனுசரிக்கப்பட வேண்டும்.

உடை அணிதல் :

கருப்பு மற்றும் நீல வண்ணம் தனிமையை குறிக்கும். ஒதுங்கி இருத்தல் அல்லது உலக விவகாரங்களில் இருந்து தனித்து இருத்தல் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் சனி என்ற கிரகம் சாஸ்தாவை குறிப்பதால் அக்கிரகத்தின் நிறமும், செயலும் சாஸ்தாவின் தன்மையை ஒத்து இருக்கிறது.

உடை தளர்வான உடையாக இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஜோடி வேட்டிகள் போதுமானது. ஒன்று இடுப்பிலும், மற்றது உடலிலும் போர்த்தி இருக்க வேண்டும். மற்றவை அடுத்த முறை பயன்படுத்த வைத்திருக்க வேண்டும். சட்டை, பனியன் போன்ற தைத்த உடைகள் அணியக்கூடாது. உடை விஷயம் விரதகாலத்திலும், சபரிமலைக்கு செல்லும் பொழுதும் பின்பற்ற வேண்டும்.

பலர் தாங்கள் பணியாற்றும் இடத்தில் உடை கட்டுப்பாடு உண்டு அதனால் சின்ன துண்டை மட்டும் கழுத்தை சுற்றி போட்டுக்கொள்கிறோம் என்கிறார்கள். இது தான் விரதத்தின் விதிகளை வளைப்பது என்கிறேன்.

உங்களுக்கு உண்மையிலேயே பக்தி இருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். உடை என்பது உங்களின் ஆன்மீக பயிற்சிக்கு தடையானால் ஆன்மீக பயிற்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உங்களின் சுயநலத்திற்கு அல்ல.

ராணுவம் துவங்கி மென்பொருள் துறை வரை பலர் சபரிமலைக்கு விரதம் இருக்கும் பொழுது உடை விஷயத்தில் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஆனால் ராணுவம் முதல் மென்பொருள் துறைவரை இருக்கும் பிற மத சகோதரர்கள் இப்படி இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். ஒரு சீக்கியரை உன் முடியை கத்தரித்துவிட்டு பணிக்கு வா என்றால் அவர் என்ன முடிவு எடுப்பார்? நம்மை போல முடியை மழித்துவிட்டு, அவர்கள் சொல்லும் உடையில் சென்று வேலை செய்வாரா என யோசிக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் சீக்கியர் அப்படி இருக்க போகிறார். இதை உங்களின் கம்பெனி அனுமதிக்கிறது என்றால் இரண்டு மாதம் மட்டும் உங்களை அனுமதிக்காதா? இது யாரின் தவறு?

விரதத்தை கடைபிடிக்க சுகந்திரம் இல்லாத நீங்கள் அப்படி ஏன் விரதம் இருக்க வேண்டும்? என் கணவரும் கச்சேரிக்கு போனார் என்ற கதையாக நானும் சபரிமலை விரதம் இருந்தேன் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது தானே?

உணவு முறை :

காலை 11 மணி மற்றும் மாலை 7 மணிக்கு என இரண்டு வேளைகள் உணவு உண்ண வேண்டும். உணவு எளிய உணவாகவும், குறைந்த அளவும் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உண்ணுவதற்கு முன்னும் குளித்து துவைத்த ஆடை உடுத்த வேண்டும்.

நாம் உண்ணும் உணவு இறைவனுக்கு நைவேத்தியம் செய்த உணவாக இருக்க வேண்டும்.

வாழை இலை அல்லது நமக்கு என ஒரு தட்டு வைத்து அதில் மட்டுமே உண்ண வேண்டும். சாப்பாடு மேஜை பயன்படுத்தாமல் நிலத்தில் பாய் அல்லது சிறிய துணி விரித்து அமர்ந்து உண்ண வேண்டும்.
விரத காலத்தில் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது அன்னதானமோ, பிட்ஷை எடுத்தோ உணவு உண்டு இருக்க வேண்டும். வீட்டில் மட்டும் உண்ணும் உணவு விரதத்திற்கு பயன்படாது.

காலை அல்லது இரவு ஏதேனும் ஒரு வேளை மட்டும் பழங்கள் அல்லது பச்சை காய்கறிகள் உண்ணுவது நல்லது. சாஸ்த்தாவிற்கு அவல்,வெல்லம் மற்றும் பழம் நைவத்தியம் செய்துவிட்டு அதை மட்டும் உண்ணலாம்.

உணவுமுறை விரதம் இருப்பது நம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, பிறருக்கு உணவு வழங்குவதிலும் இருக்கிறது. நம் விரத காலத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்வதும், அன்னதானம் செய்பவர்களுக்கு கைங்கரியம் செய்வதும் நல்லது.

பழக்க வழக்கங்களில் விரதம் கடைபிடிப்பது என்பது என்ன என பார்ப்போம்..

(சரணம் தொடரும்)