Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 29, 2013

சுப்பாண்டி சின்ரோம்

அன்று வழக்கம் போல ஒரு தினமாக இருக்கும் என நினைத்திருந்தேன். அதில் ஒரு மாற்றம் வந்தது. காலையில் பணிகளை முடித்துவிட்டு வெளியே செல்ல கிளம்பும் நேரத்தில் பெரிய வாகனம் இரண்டு வாசலில் வந்து நின்றது. அஜானுபாகுவாக பல வெள்ளைக்காரர்களும் சில நம்மூர் ஆட்களும் இறங்கி வந்தனர்.

கருப்பு கோட்டு, கருப்பு கண்ணாடி அணிந்த இருவர் காதில் ஒரு கருவியையும், கோட்டின் கழுத்துப்பகுதியில் உள்ள மைக்கிலும் என் அடையாளங்களை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்கள் இருக்கும் தெருவின் முனைகளை சிவப்பு-வெள்ளை பட்டைகளை கொண்டு அடைத்து போக்குவரத்தை மூடிவிட்டனர். சில நிமிடத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

ஒரு சில வெள்ளைக்காரர்கள்,  “என்னை நெருங்கி நாங்கள் உங்களுடன் பேச வேண்டும். சில மணிநேரம் ஒதுக்க முடியுமா?” எனக் கேட்டனர். என்னையும் மதித்து சிலர் கேட்கும் பொழுது தவிர்க்கவா முடியும்? சரி என்றேன்.

அவர்கள் சொன்ன விஷயங்களை டப்பிங் செய்து உங்களுக்காக தமிழில் இங்கே தருகிறேன்.நாங்கள் அமெரிக்காவின் மனோவியல் ஆய்வாளர்கள். கடந்த 2009ஆம் ஆண்டு நாங்கள் அனுப்பிய சாட்டிலைட்டில் எங்கள் ஆய்வுக்கான நபர் நீங்கள் என அது GPSல் சுட்டிக்காட்டுகிறது. எங்களின் ஆய்வுக்கு ஒத்துழையுங்கள், இது உலக மனோவியல் ஆராய்ச்சியில் மிகவும் புதிய தெளிவை உண்டு செய்யும். 

நம்மால் உலகுக்கு நன்மை நடக்கிறது என்றால் இல்லை என்று சொல்வோமா? உடனே சரி என்றேன். இதில் ஒரு அற்ப சந்தோஷமும் இருந்தது. போலியாக ஆன்மீகவாதிகள் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், தங்களை இப்படி ஏதேனும் சோதனைக்கு உட்படுத்தி கருவிகளை கொண்டு ஞானம் அடைந்ததாக சொல்லி கல்லாக்கட்டுவார்கள். நாமும் எத்தனை நாள் தான் இப்படி இருப்பது என நினைத்து ஆய்வுக்கு சம்மதித்தேன்.

கையில் இருக்கும், பெட்டியை திறந்து அதில் உள்ள வயர்களை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டனர். என் தலை, மார்பு, கைகள் கழுத்து என பல இடங்களில் சிறிய க்ரீம் தடவி அதில் வயர்களை ஒட்டவைத்தனர்.

சில நிமிடங்கள் கரைந்தது. கருவிகளில் வரைபடங்கள் மேலும் கீழும் துள்ளிக்கொண்டே இருந்தது. வயதான டாக்டர் ஒருவர் என்னிடம் நெருங்கி வந்து தன் கண்ணாடியை கழற்றினார். சினிமாவில் வருவதை போல இனி 24 மணிநேரம் கழித்துதான் சொல்ல முடியும் என வசனம் பேசிவிடுவாரோ என யோசனையுடன் அவரை பார்த்தேன்.

நாங்க தேடி வந்த ஆள் நீங்க இல்லை. உங்களுக்கு எல்லாம் நார்மலா இருக்கு...என்றார். அப்பாடா இலவசமா செக் செஞ்சு நாம நார்மல்லு தெரிஞ்சுக்கிட்டமே என நிம்மதி அடைந்தேன்.

டாக்டர் என்னிடம் தொடர்ந்து பேச துவங்கினார். “நாங்க தேடி வந்தது ஒரு ஸ்பெஷல் பர்சன். அவர் ஐன்ஸ்டின், எடிசனுக்கு பிறகு அவங்களை விட ஐக்,.யூவில பெரிய நிலையில் இருப்பவர். எடிசன் ஐன்ஸ்டின் எல்லாம் எழுதும் பொழுது ஒரு வார்த்தையையோ அல்லது வரியையோ முண்ரன்பாடா எழுதுவாங்க. உதாரணமா , I am here - அப்படீங்கிறதை ereh ma I. அவங்க இப்படி திருப்பி எழுதறது கண்ணாடியில் காட்டி கூட படிக்க முடியாது. ஆனா நாங்க தேடி வந்த ஆள் யோசிக்கும் போதும், பேசும் போதும் இப்படி செய்வாருனு எங்க சாட்டிலைட் சொல்லுது. ஒரு வார்த்தையை நீங்க சொல்லும் போது அதற்கு சமமா ஒலிக்கும் வேறு ஒரு வார்த்தை அவரோட மனசுல வரும் அதையே அவர் ஞாபகம் வச்சுக்குவார்.  இவங்களோட ஐக்,யூல இருக்கிற குழந்தைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். இயல்பு குழந்தை போல இல்லையேனு  வருத்தப்படாமல் வளர்த்தா அவங்க பெரிய விஞ்ஞானியா வருவாங்க.”  

இவ்வாறு டாக்டர்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே “அப்ப அந்த குழந்தைகளுக்கு ஹோம்ப்ளான் சாப்பிட கொடுக்கலாமா?” என கையில் ஒரு வீட்டின் வரைபடத்துடன் நின்று கொண்டிருந்தான் சுப்பாண்டி...!

இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. டாக்டர்கள் தேடிவந்தது என்னை இல்லை..! சுப்..சுப்..சுப்பாண்டியை..!

ஒரு நாள் நான் ஆங்கிலத்தில் ஆன்மீக கட்டுரை ஒன்றை டிக்டேட் செய்துகொண்டிருந்தேன். GOD என வரும் இடத்தில் எல்லாம் DOG என எழுதி இருந்தான். ஏன் இப்படி என கேட்க, பைரவரும் சாமி தானே என என்னை லாஜிக்கால் மடக்கினான். பல வேலைகளை எக்குத்தப்பாக செய்யும் பொழுது சரி அவன் முட்டாளாக இருப்பான் என நினைத்தால், அவனை ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு ஆய்வு செய்ய இவர்கள் வேறு கிளம்பி வந்து இருக்கிறார்கள். இவனை போய் ஆய்வு செய்ய அமெரிக்காவிலிருந்து வந்திருக்காங்களே என பொறாமையும் ஒரு புறம் அதிகரித்தது.

“சாமி உடம்பு செரியில்லையா? ட்ராக்டர்கள் எல்லாம் வந்திருக்காங்களே?” என கேட்டுவிட்டு கையில் இருந்த பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து, “சாமி இதை சாப்பிடுங்க சரி ஆயிடும்” என்றான். என்ன என்பதை போல பார்த்தேன்.

“இது போப்பாண்டவர் கோவில் பஞ்சாமிர்தம்” என கொடுத்தான். டப்பாவில் பழனியாண்டவர் பஞ்சாமிர்தம் என எழுதி இருந்தது...!

ஓ இவன் டாக்டர்கள் சொல்லுவதை மறைந்திருந்து கேட்டுவிட்டு வேண்டுமென்றே இவர்களிடம் பெயர் வாங்கப்பார்க்கிறான் என யோசித்தேன். இருந்தாலும் இவன் ஐக்யூ மேல் ஒரு நம்பிக்கை வந்தது.

க்க்கும்...தொண்டையை கணைத்து, டாக்டர்கள் வந்த விஷயத்தை சொன்னேன்..சுப்பாண்டி உடனே சுறு சுறுப்பாகிவிட்டான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி போல தலையை ஒரு பக்கம் சாய்த்து புருவம் உயர்த்தி, இடுப்பில் கை வைத்து அமெரிக்கர்களை பார்த்து கேட்டான்...

“யாரை செய்கிறார் டெக்ஸ்டு, எதற்காக செய்ய வேண்டும் டெக்ஸ்டு. செயலுக்கு வந்தாயா வாத்து நட்டாயா...” என சுப்பாண்டி பேச பேச அவனுக்குள் இருந்த சந்திரமுகி வெளியே வந்தாள். இவன் தான் அந்த ஆராய்ச்சி பீஸு என எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.

இவனின் இந்த மன பிரள்வை சுப்பாண்டி சின்ரோம் என பெயரிட்டிருக்கிறார்கள். சுப்பாண்டியை அமெரிக்காவிக்கு ஆய்வுக்காக கூட்டி செல்லப்போகிறார்கள். உங்களுக்கும் இப்படி ஏதேனும் இருந்தால் கூறவும். நீங்களும் இலவசமாக அமெரிக்கா செல்லலாம்.

அமெரிக்கா செல்லும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, “சாமி என்னை அமெரிக்க கூட்டிக்கிட்டு போறது ராணி முகர்ஜிக்கு தெரியுமா?” என கேட்டான். நான் குழப்பத்துடன் அந்த நடிகைக்கு எதுக்குடா நீ போறது தெரியனும்னு கேட்டேன்.

நடியையா? அவங்க தானே நம்ம நாட்டு ஜனாதிபதி என்றான் சுப்பாண்டி..!


-----------------------------------

வேதகால மனோவியலை (Vedic psychology) ஒரு தொடராக எழுதலாம் என இருக்கிறேன். கடினமான இந்த சரக்கை நகைச்சுவையால் எளிமையாக்கலாம் என எண்ணம். அதன் முன்னோட்டமே இந்த கட்டுரை.

Saturday, May 18, 2013

ப்ராணாயாமமும் ஜோதிடமும்

கடந்த ஞாயிறு அன்று திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் ஜோதிட ஐபெரும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் அடியேன் ஆற்றிய சிற்றுரையின் தொகுப்பு உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ராணாயாமம் என்ற தலைப்பில் ஜோதிட மாநாட்டில் ஆற்றிய உரை இதோ :