Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 30, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 4


 சிறைச்சாலை அழைப்பை ஏற்று நான் அங்கிருப்பவர்களை பார்க்க சென்றேன்.  இந்திய சிறைச்சாலைகளை கண்ட எனக்கு அர்ஜண்டினா சிறைச்சாலை மிகவும் பிரம்மிப்பை உண்டாக்கியது. அமைச்சர்கள் தங்கும் விருந்தினர் மாளிகைக்கு ஒப்பாக இருந்தது அந்த சிறைச்சாலை.

மேலும் அங்கே அடைபட்டவர்களுக்கு சகல வசதிகளும் உண்டு. சகல வசதிகள் என்றால் டெலிபோன், செல்போன், இன்ட்ரநெட் , உணவு, உடை முதல் அனைத்தும் அவர்கள் முடிவு செய்யலாம்.

சிலர் இண்டர்நெட் மூலம் வியாபாரம் செய்து வருமாணம் பார்க்கும் அளவுக்கு சிறையில் சுகந்திரம் உண்டு. தினமும் ஃபேஸ்புக் மூலம் குடும்பத்தினருடன் பேசிக்கொள்கிறார்கள். 

நானும் சுப்பாண்டியும் குழப்பம் அடைந்தோம். இதுக்கு ஏன் சிறைச்சாலைனு பேரு வச்சாங்க ஹோட்டல்னு பேர்வைக்கலாம் என்றான் சுப்பாண்டி. 

மனித உரிமையை மதித்தல் என்றால் என்ன என தெளிவாக தெரிந்துகொண்டோம். தண்டனை என்பது வெளியே உலாவக்கூடாது என்பது தானே தவிர இவர்களை அடிமையாகவோ விலங்காகவோ வைத்திருப்பதில்லை என விளக்கினார் சிறை அதிகாரி. இவர்கள் விளையாடுகிறார்கள், சிலர் புகைபிடிக்கிறார்கள் என சிறைச்சாலைக்குள் வந்த உணர்வே எனக்கு ஏற்படவில்லை. ஏதோ ஒரு கிளப்பில் நுழைந்த உணர்வு மட்டுமே இருந்தது.

இங்கே சிறைச்சாலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். கைதிகளுக்கு அல்ல..!

குழுமி இருந்த கைதிகளுடன் உரையாற்றினேன். அவர்களில் ஒருவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி தத்துவங்களை படித்து தன் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் என்றும் சிறையில் இருந்தாலும் அவரின் கருத்துக்களால் விடுதலையாக உணர்கிறேன் என்றும் கூறினார். ஆயுள் தண்டனை கைதியான அவர் ஜே.கிருஷ்ண மூர்த்தியை பற்றி கூறியது மகிழ்வானதாக இருந்தது.

ஆயுள் தண்டனை கைதிகள் கேள்விகளை கேட்க துவங்கினார்கள். முதல் கேள்வியே சிறப்பாக கேட்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளராக என் மாணவி இருக்க எங்கள் உரையாடலை கீழே 
தொகுத்துள்ளேன்.

“எங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்”

“என்னுள் ஒருவனாக நினைக்கிறேன். வித்தியாசமாக நினைக்க ஒன்றும் இல்லை”

“ நாங்கள் கொடூரமான பாவம் செய்து சிறையில் அடைபட்டிருப்பவர்கள் அல்லவா?”

“அனைவரும் சிறையில் தான் இருக்கிறார்கள் நீங்கள் மட்டுமல்ல. சிலர் சுவரால் எழுப்பப்பட்ட சிறையில் கைதிகள். சிலர் உணர்வால் எழுப்பபட்டா ஐந்து புலன் சிறையின் கைதிகள். வித்தியாசம் அவ்வளவுதான். உங்களை போலவே அவர்களும் நன்னடத்தையால் ஒரு நாள் விடுதலை ஆவார்கள்” என்றேன்.உள்ளம் நெகிழ்ந்து கண்ணீருடன் என்னை அணைத்துக் கொண்டனர். 

உணர்ச்சிபெருக்காக ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்தது இந்த சந்திப்பு.

ஆன்மீக வழிகாட்டுதல் செய்துவிட்டு, அவர்களை என்னுடன் இணைந்து இறை பாடல் பாடி ஆடி  மகிழ்ந்து கிளம்பினோம். 

சிறை அதிகாரிகள் இவர்கள் அனைவரும் இத்தனை மகிழ்ச்சியாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை என கூறினார்கள்.

விடை பெற்று கிளம்பும் பொழுது “ஏஞ்சாமி கோவையில் இருக்கும் சிறைச்சாலைக்கு எல்லாம் நீங்க போறதில்லை” என கேட்டான் சுப்பாண்டி.

நான் அவனை ஏற இறங்க பார்க்க...

“இல்ல சாமி பெரிய ஆன்மீகவாதிகள் எல்லாம் சிறைச்சாலை, திவிரவாதிகளுக்கு போயி யோக சொல்லி கொடுத்து திருத்தறாங்களே. அதுபோல நீங்க செய்ய மாட்டீங்களானு கேட்டேன்” என்றான்.

அதில் ஓர் உள்குத்து இருப்பதை உணர்ந்தாலும், “ நமக்கு சிறைச்சாலைக்குள்ள எதுக்குப்பா போயி கத்துதரனும்? வெளிய கத்து தந்து யாரும் உள்ள போகாம பார்த்துக்கிட்டா போதும்” என சீரியஸாக பதில் கூறினேன்.

 இப்படியாக நாங்கள் வந்து ஒரு வாரம் பொதுமக்களுக்கு தியான பயிற்சிகளும், சிறைச்சாலை சந்திப்புமாக சென்றது. அடுத்த வாரங்களில் மத்திய அர்ஜண்டினாவில் உள்ள லா ர்யோகா என்ற இடத்தில் பயிற்சி கொடுக்க செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அந்த நகரம் 1300 கிலோமீட்டர் தூரம் இருந்தது. போக்குவரத்து பஸ் மட்டுமே. இங்கே இரயில் மற்றும் இதர போக்குவரத்துக்கள் இல்லை.

என்னுடன் இருந்த பிற அர்ஜண்டின மாணவிகள், “இந்த இடம் வரை செல்லும் நீங்கள் அருகே உள்ள பிற இடங்களுக்கு எல்லாம் செல்லலாமே” என யோசனை கூறினார்கள். அதை கேட்ட சுப்பாண்டி ,”சாமி சாமி நாம போலாஞ்சாமி” என கேட்க துவங்கினான்.

காரில் சென்றால்தான் இந்த இடங்களுக்கு செல்ல முடியும் என காரில் பயணம் உறுதி செய்யப்பட்டது. இப்படியாக நாங்கள் திட்டமிட்டு செல்ல வேண்டிய நகரங்களை பட்டியலிட்டால் மொத்தம் ஐயாயிரம் கிலோமிட்டர் தூரம் வந்தது.

அதிர்ச்சியுடன்.....என்னாது ஐயாயிரம் கிலோமீட்டர் காரிலா? யாருடா சுப்பாண்டி ட்ரைவ் செய்வா? என கேட்டேன்.

சுப்பாண்டியின் விரல் என்னை நோக்கி சுட்டிக்காட்டியது..

(அன்பு பெருகும்)

Thursday, November 28, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 3

எங்கள் காரில் ஏறிக்கொண்டு எங்களுடன் பயணம் செய்ய துவங்கினார் அகஸ்டின்.அவர் தான் எங்கள் பார்வையற்ற மொழிபெயர்ப்பாளர்.

மாலை பொதுக்கூட்டத்திற்கு முன் பரஸ்பரம் அறிமுகமும் பேச்சின் சாரத்தையும் புரிந்துகொள்ள அவரை சந்திக்க எண்ணி இருந்தேன்.

அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து அவரை கூட்டிக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம். அறிமுகப்படுத்திவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். வாகனத்தை என் மற்றொரு அர்ஜண்டினா மாணவி ஓட்டிக் கொண்டிருந்தார்.


 என்னை பற்றியும் எனது பணிகளை பற்றியும் அகஸ்டினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பேச்சின் நடுவே சடாரென வாகன ஓட்டியிடம் திரும்பி , “அடுத்த வரும் தெருவில் வலதுபக்கம் திரும்புங்கள்” என சொல்லி என்னிடம் பேச்சை தொடர்ந்தார்.

நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எப்படி உங்களால் முடிகிறது என கேட்கும் முன், “அங்...அப்படியே வலதுபக்கம் மூணாவது வீட்டில், யெஸ் இங்கதான் நிறுத்துங்க..” என சொல்லி காரிலிருந்து இறங்கி தன் வீட்டிக்குள் சென்றார்.

இவர் யார் கைகளையும் பற்றிக்கொள்வதில்லை. பிறப்பிலிருந்தே கண்கள் தெரியாதவர். பல இசைக்கருவிகளை இசைக்கிறார். மேலும் நகரின் முக்கிய இசைக்குழுவில் இருக்கிறார். தான் பார்வையற்றவர் என்பதில் தாழ்ச்சி இல்லாமல், யாரும் அவரின் உடல் குறையை குறிப்பிடாமல் இருக்க எப்பொழுதும் நகைச்சுவையுடன் இருக்கிறார். மாலை நேர பொதுக்கூட்டத்தில் சிறப்பாக மொழிபெயர்த்தார். 

எப்படி கண்களால் பார்ப்பது போல அனைத்தையும் செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், “உங்களுக்கு கண்கள் இருக்கிறது அதனால் அந்த உறுப்பால் மட்டும் பார்க்கிறீர்கள். எனக்கு இல்லாததால் பிற நான்கு புலன்களால்  பார்க்கிறேன். உங்கள் எல்லோரையும் விட எனக்கு பார்வை அதிகம்” என்றார்.

அவரின் வார்த்தைகள் பல விஷயங்களை சுட்டிகாட்டியது.

விடைபெறும் பொழுது, “ஸ்வாமி, ஆங்கிலத்தில் சந்தித்து விட்டு பிரியும் பொழுது சீயூ என சொல்லுவார்கள். நான் சீமீ என சொல்லி பிரிகிறேன்.ஏனென்றால் என்னால் உங்களை பார்க்க முடியாது” நகைச்சுவையுடன் விடைபெற்றார்.

ஓர் உறுப்பில் மட்டும் பார்க்கும் நான் குருடன் அல்லவா? நான்கு புலனால் உணரும் அவர் பார்வையற்றவர் தானே?

எங்கள் பொதுக்கூட்டமும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக சென்றதால் நாளிதழ்களும் தொலைக்காட்சியிலும் செய்திகளாயின. மக்களின் கவனம் அதிகரித்தது. தெருக்களில் நான் நடந்து சென்றாலே “இந்தியன் ஸ்வாமி” என என்னை அரவணைத்து மகிழ்ந்தனர். இதனால் அர்ஜண்டினாவின் பல்வேறு பகுதிலிருந்தும் நிகழ்ச்சிகள் நடத்த அழைப்புகள் வந்தது.

அப்படிப்பட்ட அழைப்புகள் மின்னஞ்சலில் வந்தது. அவற்றை பரிசீலித்து கொண்டிருந்தேன். அவற்றில் ஒரு சுவாரசியமான அழைப்பு இருந்தது.

“அனைவரும் உங்களை பார்க்க விரும்புகிறார்கள். நாங்கள் உங்களை பார்க்க வர இயலாது. நீங்கள் எங்களுடன் உரையாடி மாலை பொழுதை செலவளிக்க வருவீர்களா?”

இப்படிக்கு 
ஆயுள் கைதிகள்
மத்திய சிறைச்சாலை, 
சாண்டா ரோசா நகரம், அர்ஜண்டினா

பல்வேறு அதிகார மையங்களின் அழைப்பை தவிர்த்துவிட்டு இவர்களை சந்திக்க சென்ற எனக்கு பல்வேறு ஆச்சரியம் காத்திருந்தது.

சிறைச்சாலைக்கு செல்ல வாகனத்தில் ஏறியதும் , சுப்பாண்டி வாகனத்தின் கதவை மூடாமல் தலையையும் உடலையும் வெளியே நீட்டியபடி , “ஏய் பாத்துக்குங்க நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயில்லு போறேன்” சப்தமாக கூவியபடி வந்தான்...

(அன்பு பெருகும்)

Monday, November 18, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 2

சனி பிடிச்சா ஒட்டகத்தில் போனாலும் தெருநாய் வந்து கடிக்கும் என சொல்லுவார்கள். அது போல எனது அர்ஜண்டினா பயணத்தில் எனக்கு துணையாக சுப்பாண்டி. தனியாக நானே என்னை சமாளிக்க முடியாமல் இருக்க..இதில் எக்ஸ்ட்ரா லக்கேஜ்ஜாக சுப்பாண்டியும் என்னுடன் இருக்க பிரச்சனை இருமடங்கு என்பதைவிட பல மடங்கு என்றே சொல்லவேண்டும்.

அர்ஜண்டினாவின் தலைநகரம் பியோனிஸ் ஏரிஸ். இது தென் அமெரிக்காவின் பாரிஸ் என அழைக்கப்படுகிறது. இங்கே தான் நான் வந்து இறங்கினேன்.

குடியுரிமை சோதனை முடித்து, எனது பெட்டி பைகளை எடுத்துக்கொண்டு விமான நிலைய கலால் சோதனை சாவடிக்கு அருகே வந்தால் பெரிய வரிசையில் மக்கள் நின்று இருந்தார்கள். ஸ்பானீஷ் 

தெரியாத குறைக்கு நானும் வரிசையில் நின்றேன். எனக்கு பின்னால் சுப்பாண்டி..

வரிசை அதிகாரியின் அருகே செல்ல செல்ல புரிந்தது இது கலால் சோதனை இல்லை ஆயுத சோதனை என புரிந்து திடுக்கிட்டோம். கையில் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாகிகள் சகிதம் மக்கள் சோதனை சாவடியில் நிற்கிறார்கள். இங்கே ஆயுதங்களை பெட்டி படுக்கை போல விமானத்தில் எடுத்து செல்லலாம். மீண்டும் அதை நாட்டுக்குள் வரும் பொழுது குறிப்பேட்டில் எழுதிவிட்டு எடுத்து செல்ல வேண்டும். 

எங்கள் முறை வந்தது- தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை திரட்டி, “டு யூ ஹாவ் எனி வெப்பன்ஸ்?” என்றார் அதிகாரி. நாங்க 

ஊதா கலர் ரிப்பனையே பார்த்ததில்லை இதில் வெப்பனாம்.. என்றான் சுப்பாண்டி.

எங்களின் நிராயுத பாணி நிலையை விளக்கிவிட்டு கடந்தோம். கடந்து செல்லுகையில் அருகே வைக்கப்பட்டிருந்த யாரும் உரிமை கோராத துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லன்சர்கள் கொஞ்சம் பீதியை உண்டு செய்தது.

தலைநகரிலிருந்து 600 கிலோமீட்டர் தூரம் உள்ள லா பம்ப்பா என்ற இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். மீண்டும் அபிநய சரஸ்வதியாகி ஒரு டாக்ஸியை பிடித்து மீண்டும் 6 மணி நேர பயணம்.

இங்கே சாலைகள் எல்லாம் ஒரே நேர் கொட்டில் இருக்கிறது. குறைந்த பட்சம் 50 முதல் 60 கிலோ மீட்டருக்கு வளைவுகள் இல்லாத வீதிகள். எங்களை கூட்டிவந்த டாக்ஸி ட்ரைவர் முன் இருக்கை அருகே ஒரு சின்ன டீவி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்த்த வண்ணம் வந்தார். இந்தியாவில் நான் பயணிக்கும் பொழுது ட்ரைவர் செல்போனில் பேசினாலே ஓரமா நிறுத்து என அலறுவேன். இவரின் செய்கை வெறுப்பூட்டவே ஏன் டீவி பார்க்கிறீர்கள் என கேட்டேன்.

தூர பயணத்தில் திருப்பம் இல்லாமல் இருப்பதால் தூங்கிவிடுவாராம். அதை தவிர்க்கவே இந்த டிவி என்றார். ஐயா நல்லா டிவியை போட்டுக்கோ என சொல்ல வைத்தது அர்ஜண்டினா சாலைகள்.

லா பம்ப்பா மாகாணத்தில் வந்து இறங்கியதும் பெரிய வரவேற்பு நிகழ்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனது தென் அமெரிக்க மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

மேலும் இந்த மாகாணத்திற்கு வரும் முதல் இந்திய ஆன்மீகவாதி என கூறி அந்த மேயர் வரவேற்றார்.

பொது நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்தும் சிறப்பாக இருந்தது.

உங்கள் பொது நிகழ்ச்சியையும் பயிற்சி வகுப்பையும் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்கிறோம். நகர மையத்தில் நீங்கள் சென்றுவிட்டு திரும்பும் பொழுது அவரை சந்திக்கலாம் என சொன்னார்கள்.

எங்கள் நகர உலா முடித்துவிட்டு வருகையில் கையில் குச்சியுடன் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று இருந்தார்.

கண்கள் பார்வையில்லாத அந்த நபர் எங்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ய போகிறாராம்....!

நாம் பரதநாட்டியம் ஆடியே பல விஷயங்களை புரியவைக்க முடியும் என நம்பிகொண்டிருந்த எனக்கு, இங்கே பார்வையற்றவர் காத்திருந்தது 

ஏமாற்றமே...இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்தேன்.

இன்று மாலை நகர மையத்தில் உள்ள அரங்கில் பொதுக்கூட்டம்...இவரை புரியவைத்து என்ன பேசி... அப்புறம் மக்கள் புரிந்துகொண்டு.. விளங்கும் என நினைத்துக்கொண்டேன்...

அந்த பார்வையற்றவரை சந்தித்த இந்த குருடன் கதையை நாளை சொல்கிறேன்.

(அன்பு பெருகும்)

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து....

இந்த வருடம் பயணத்திற்கான வருடம் என என் தசா புக்தி சொன்னதோ என்னமோ..பெட்டியுடன் சுற்றியபடியே இருக்கிறேன்.

கும்பமேளாவில் துவங்கிய பயணம் டெல்லி, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா எங்கே நிற்கும் என தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதோ இப்பொழுது தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அர்ஜண்டினாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

கம்போடியாவை பற்றி ஒரு தொடர் எழுதவேண்டும் என எண்ணுவதற்குள் அர்ஜண்டினாவில் அடைக்கலமாகி விட்டேன்.


இந்தியாவிலிருந்து இங்கே வருவதற்கு மிக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். 

வட அமெரிக்காவை போல இது பொருளாதார செழுமையான நாடு அல்ல. மேலும் அதிக விமான போக்குவரத்தும் கிடையாது. 

முழுமையாக இரண்டு நாட்கள் வெவ்வேறு நாடுகள் வழியாக சென்றால் தான் அர்ஜண்டினாவை வந்து அடைய முடியும்.

தென் அமெரிக்க கண்டம் பிரேசில், அர்ஜண்டினா, பெரு,சிலே, பொலிவியா, பரகுவே, உருகுவே, வெனிசுலா, கொலம்பியா ஆகிய நாடுகளை கொண்டது. இதில் பிரேசில் தவிர பிற நாடுகள் 200 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் மக்களால் ஆக்கிரமிக்கபட்டு ஸ்பெனீஷ் கலாச்சாரம் வேர் ஊன்றி நிற்கிறது. பிரேசில் போர்ச்சிகீசியர்களால் ஆளப்பட்டு போர்ச்சிகீஸ் மொழி பேசுப்படும் கலாச்சாரமாக இருக்கிறது.

நிற்க... இது என்ன விக்கிபிடியா பக்கமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இருங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.

கோவையிலிருந்து...பயணம் துவங்கி டெல்லி, துபாய், ரியோடிஜனிரோ(பிரேசில்) பிறகு போனிஸ் ஏரிஸ் என்ற அர்ஜண்டினா தலைநகரத்திற்கு வந்து சேர்ந்தேன். படிக்கும் பொழுதே மூச்சு முட்டுகிறதா?
பயணித்தவனை நினைத்துப் பாருங்கள்.

இப்படிபட்ட அர்ஜண்டினாவுக்கு பயணம் செய்ய துவங்கும் பொழுது புதிய மக்கள் கலாச்சாரம் என ஒன்றும் தெரியாது. தமிழே நமக்கு தாளம் என்பதால் ஸ்பேனீஷ் பற்றி சொல்ல வேண்டாம். அர்ஜண்டினா செல்லும் பொழுது அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் எதுவும் தெரியாது.

கால்பந்து எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் மரடோனாவும், நம் ஊர் புரட்சி புலிகளின் சட்டையில் பார்த்த சேகுவாரோவை மட்டுமே தெரியும்.

துபாய் விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு ஐரோப்பியர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். உணவகத்தில் பரத நாட்டியம் ஆடாத குறையாக சைவ உணவு கேட்டு வாங்கிவந்ததை பார்த்து எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். அர்ஜண்டினா என்றேன். உலகின் சிறந்த நகைச்சுவையை கேட்டது போல புரண்டு சிரித்துவிட்டு, “அர்ஜண்டினாவில் அசையாமல் அமர்ந்திருந்தா உங்களையே பன்னுக்குள் வைச்சு பர்கர்னு சாப்பிருவாங்க.... அந்த ஊரில் சைவ சாப்பாட்டு பழக்கத்துடன் போய் என்ன செய்ய போறீங்க ” என பீதியை கிளப்பினார். இனி ஒரு மாதம் இருக்க வேண்டிய நாட்டை பற்றி நல்ல கருத்து இது என நினைத்துக்கொண்டேன்.

இப்படி பல முன் உரைகளை கடந்து அரைத்தூக்கத்துடன் அர்ஜண்டினாவில் நான் கால் வைக்கும் பொழுது தெரியாது அது பல சுவாரஸ்யங்களை எனக்காக புதைத்து வைத்திருக்கிறது என்று...

(அன்பு பெருகும்)

Wednesday, November 13, 2013

பகவான் செய்த தவறு...!

அந்த மஹானின் வாழ்க்கை சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தேன். மஹானின் பெயரை சொல்லும் பொழுது அவரின் பெயருடன் “பகவான்” என சேர்த்து சொன்னேன்.

என் மாணவர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் நீங்கள் எப்படி மனித உருவில் இருப்பவரை பகவான் என சொல்லலாம். இது மிகத் தவறான முன் உதாரணம்.... பகவன் பகவான் தான்.. மனிதனாக முடியுமா? இப்படித்தான் தன்னை தானே பலர் கடவுளாக்கி வியாபாரம் செய்கிறார்கள் என நீண்ட உரை நிகழ்த்தினார்.

அவர் முடிக்கும் வரை காத்திருந்தேன்.

பின்னால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப்படத்தை காட்டி... யார் இவர்? என கேட்டேன்.

நீங்க தான் ஸ்வாமிஜி என்றார்.

ஒரே ஒரு முறை என் உருவத்தை அச்சிட்டதால் இந்த பேப்பர் நான் ஆகும் பொழுது..பல முறை இறைவன் பிரவேசித்த உடல் பகவான் ஆகாதா ? என்றேன்..

 “பகவானே.....!” என்றார்...