Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, February 5, 2015

உத்தவ சுப்பாண்டி


பாகவத புராணத்தின் கடைசி பகுதியில் வருவது உத்தவ கீதை. 125 வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டு பூலகை விட்டு வைகுண்டம் செல்லுவதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தயாராகிறார்.

இச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரின் நீண்ட கால நண்பர் மற்றும் மந்திரியாக இருக்கும் உத்தவர் ஆயிரம் கேள்விகளுக்கு மேல் யோகம், ஞானம், மோட்சம் என பல விஷயங்களை பற்றி கேட்கிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில் உத்தவ கீதையாகும்.

ஆயிரம் கேள்விகளுக்கு மேல் கடந்த பிறகு உத்தவர் சில   நொடிகள் மெளனமாக இருக்கிறார். உடனே கிருஷ்ணர், " உத்தவா உனக்கு சந்தேகம் தீர்ந்ததா என கேட்கிறார்". 

உத்தவர் புன்னகையுடன், "ஸ்ரீ கிருஷ்ணா உன்னுடன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது முதல் வாழ்ந்து வருகிறேன். சிறுவயது  முதல் இந்த நாள் வரை நம் நட்பு தொடர்கிறது. நான் உனக்கு சித்தப்பா மகனும் கூட..! உன் ராஜபரிபாலனத்தில் எனக்கு மந்திரி பதவி அளித்து உன்னுடன் இருக்க செய்து மேலும் என்னை உனக்கு  நெருக்கமானவனாக மாற்றினாய். இத்தனை காலம் முழுமையான பகவத் செரூபமான உன்னுடன் வாழ்ந்துவிட்டு எனக்கு எப்படி சந்தேகம் வரும்? எனக்கு சந்தேகம் என்பதே இல்லை. எப்பொழுதும் இருக்காது...!" என்றார்.

ஸ்ரீகிருஷ்ணர் ஆச்சரியத்துடன் பார்த்து, "அப்படியானால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை ஏனப்ப எழுப்பினாய்?" எனக் கேட்டார்.

உத்தவர் பக்தி நிறைந்த கண்களில் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக பார்த்தவண்ணம் கூறினார்....

"நான் கேட்ட கேள்விகளின் பதில் எனக்கு முன்பே தெரியும். இன்ன கேள்விக்கு இப்படித்தான் உமது பதில் இருக்கும் , அதற்கு இப்படி உதாரணம் சொல்வீர்கள் என்பது வரை எனக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும் இப்படிப்பட்ட கேள்வி கேட்டால் தான் நீங்களும் பதில் சொல்வீர்கள். அதை காரணமாக வைத்து உங்களுடன் சில மணி நேரம் செலவிடலாம். பகவானாகிய உங்களின் சாநித்தியத்தை நாங்கள் மெளனமாக பார்த்து எத்தனை காலம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் உங்களுக்கு சில நிமிடங்களில் எங்களின் இருப்பு சலித்துவிடலாம். அடுத்த பக்தர்களை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் இப்படி கேள்வி கேட்டால் அதன் காரணமாக எங்களுடன் இருப்பீர்களே அதனால் தான் கேட்டேன்" என நீண்ட விளக்கம் அளித்தான்.

இதை ரசித்த வண்ணம் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்ல தயாரானார்..

இப்படித்தான் எனக்கும்......! 

நான் தலை போகும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பொழுது சுப்பாண்டி ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் கேட்ப்பான். சுற்றம் சூழல் எதையும் பார்க்க மாட்டான். கேட்டுவிட்டு பெருமையாக ஒரு பார்வை வேறு பார்ப்பான். அந்த கேள்விக்கு நான் பல முறை பதில் சொல்லி இருப்பேன். இவன் இருக்கும் பொழுது யாராவது அந்த கேள்வியை கேட்டு அதற்கு பதில்  சொல்லி இருப்பேன். ஆனாலும் அவன் கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு காரணம் உத்தவர் போல என்னுடன் இருக்க வேண்டும் என்ற பக்தி என நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் சுப்பாண்டிக்கு பக்தியை விட ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ் என்ற வியாதி என்றே நான் சந்தேகப்படுகிறேன்.

நீங்களும் நேரம் இருந்தால் உத்தவ கீதை படித்து அதன் சாரத்தை நன்றாக புரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமானவரிடம் கேள்வி கேளுங்கள்...

இனி தெரிந்து கொண்டே யாராவது கேள்வி கேட்டால் மனதுக்குள் இப்படி சொல்லி கொள்ளலாம்........

-தட் உத்தவ கீதை மொமேண்ட்..!