Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, August 19, 2015

வாஸ்து கோளாறு - 3

முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று உண்டு. முல்லா அரசரின் முதன்மை மந்திரியாக இருந்தார். அரசர் முக்கிய விஷயங்களை முல்லாவிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். ஒரு நாள் முல்லா சிறிய தூண்டு கட்டிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அரசவை காவலர்கள் வந்து அரசன் அழைப்பதாக சொன்னவுடன் அப்படியே கிளம்பி அரசவைக்கு வந்துவிட்டார்.

துண்டு மட்டும் அணிந்து முல்லா வருவதை கண்டதும் அரசனும் அரசவையில் உள்ளவர்களும் முகம் சுளித்தனர். அரசன் முல்லாவிடம் அரசவைக்கு வரும் பொழுது அணியும் ஆடையை அணிந்து வா என கூறினார். வீட்டுக்கு சென்ற முல்லா ஒரு குச்சியை எடுத்து அதில் அரசவையில் அணியும் மந்திரி உடையை அணிவித்து அத்துடன் ஒரு கடிதம் எழுதி காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

அந்த கடிதத்தில் ”அரசே , முக்கிய ஆலோசனை என்றவுடன் கட்டிய துண்டுடன் வந்தேன். என் உடை தான் ஆலோசனை வழங்குகிறது என்பது உங்கள் பேச்சின் மூலம் அறிந்தேன். இக்கடிதத்துடன் உடை அணிப்பி உள்ளேன். ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் - என எழுதி இருந்தது..!

உடை ஒரு மனிதனின் அறிவு செயலை செய்யாது. அறிவு அந்த உடையை அணிந்திருக்கும் மனிதனுக்கு உள்ளே இருந்து செயல்படுமே தவிர உடையில் என்ன இருக்கிறது?

வீடு என்பது நம் உடலின் மேல் அணியும் ஆடை போல பெரிய உடை என தெரிந்துகொள்ளுங்கள். உடையின் உள்ளே வசிக்கும் மனிதன் ஆற்றல் பெற்றவனாக இருந்தால் என்ன உடை அணிந்தாலும் அவனுக்கு ஆற்றல் செயல்படும். அதை விடுத்து ஒரு மனிதன் ஆற்றல் இழந்து இருக்க வீடு தான் ஆற்றலை கொடுக்கிறது என்றால் அவன் அத்தகைய ஆற்றலை எப்பொழுது வேண்டுமானாலும் இழப்பான்.

உங்கள் உடை செளகரியமாகவும், தேவையான வசதிகள் உடையதாகவும், நவநாகரீகமாகவும் இருந்தால் அது சரியான உடை என அணிந்து கொள்கிறோம்.

அதுபோல உங்கள் வீடும் செளகரியாமான, வசதி உள்ள மற்றும் நாகரீகமான நிலையில் இருந்தால் நல்லது. வாஸ்து அடிப்படையில் வீடு கட்டும் பொழுது  அமைத்துக் கொள்ளுங்கள், பிறகு வாழ்க்கை முழுவதும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. துன்பம் வரும் பொழுதெல்லாம் வாஸ்து பார்க்கும் நிலையில் மக்கள் தற்சமயம் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு நிலை.


வாஸ்து என்பது உபசாஸ்திரம். பிற சாஸ்திர ஆன்மீக விஷயத்துடன் வாஸ்து இணைந்து செயல்படும். வாஸ்துவை மட்டுமே வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. யாக சாலை எப்படி அமையவேண்டும், எங்கே யாக குண்டம் இருக்க வேண்டும் என்பது வாஸ்து குறிப்பில் உண்டு.

அப்படி யாகசாலையை வாஸ்து அடிப்படையில் கட்டிவிட்டு சும்மா இருந்தால் போதுமா? அங்கே யாகங்கள் நடந்தால் தானே பலன் உண்டு?

வீடு கட்டும் பொழுதும், வீட்டு கட்ட துவங்க பூமி பூஜை செய்யும் பொழுதும் வாஸ்து புருஷன் என்ற நிலையில் பஞ்சாங்க கணித தன்மை செய்கிறார்கள்.

அதன்படி வருடம் சில நாட்கள் வாஸ்து புருஷன் விழிப்பான், குளிப்பான், உணவு உண்பான் மற்றும் தாம்பூலம் தரிப்பான் என சொல்லுவதுண்டு. வாஸ்து காலத்தில் சரியான நேரத்தில் பூமிபூஜை செய்து வாஸ்து பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் என்பது பஞ்ச பூதத்தின் சலனத்தின் அடிப்படையில் ஏற்படும் விளைவை ஒரு மனிதனாக உருவகப்படுத்துவது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பிறகு கிரகபிரவேசம் நடக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்பு வாஸ்து சாந்தி என ஒரு பூஜை செய்வார்கள். வாஸ்து புருஷனை தவறாக துன்புறுத்தி இருந்தாலோ, வாஸ்து பிரச்சனை கொண்ட வீடாக இருந்தாலோ அதனால் ஏற்படும் விளைவுகளை தீர்க்க செய்வதே இந்த வாஸ்து சாந்தியாகும்.

வாஸ்து சாந்தி ஹோமங்கள் செய்த பின்பு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்றவைகள் செய்த பின்பே கிரஹபிரவேசம் செய்வோம். அதனால் இத்தனை ப்ரார்த்தனைகளுக்கு பிறகும் வாஸ்து பிரச்சனை வர வாய்ப்பு இல்லை..!

தற்சமயம் சுலநலக்காரர்களால் வாஸ்து புருஷன் - வாஸ்து பகவானாக மாறிவிட்டார். விரைவில் அவருக்கு கோவில் கட்டி அங்கே சென்று வழிபட்டால் வாஸ்து பிரச்சனை நீங்கும் என கிளப்பிவிடுவார்கள். இப்படிதான் நம் சாஸ்திரங்கள் கொச்சைப்படுத்தப்படுகிறது. நம் கலாச்சார வாஸ்து கோளாரு பத்தாது என சீன வாஸ்து , எகிப்து வாஸ்து என தனியாக குழப்பங்கள் உண்டு.இறந்த உடல் மூவாயிரம் வருடமாக காக்கப்படும் பிரமீடு வைத்து உள்ள கட்டிடம் வாஸ்துவை முடிவு செய்யும் என தான் உயிரோடு வசிக்கும் வீட்டில் பிரமீடு வைக்கிறார்கள். இதற்கு தான் நடைபிணமாக வாழ்வது என சொல்லுவார்களோ?

இவைகளை பற்றி நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை. நம் கலாச்சார வாஸ்துவே கேவலமாக பயன்படுத்தும் இக்காலத்தில் அடுத்த கலாச்சாரம் பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி நமக்கு உண்டு?

வாஸ்து சரியில்லை என்றால் வீட்டை மாற்றாதீர்கள். வாஸ்து சரி யில்லை என்றால் உங்கள் வீட்டின் பகுதியை இடித்துக்கட்டாதீர்கள். வாஸ்து சரி இல்லை என்றால் காற்றில் அசையும் மணியோ மூங்கில் நாற்றோ ,பிரமீடோ உதவாது. வேறு என்ன தான் செய்வது?

ஒரு பயில்வான் உங்களிடம் வம்பு செய்கிறான் என வைத்துக்கொண்டால் அவனை எதிர்க்க நீங்கள் உங்களின் உடையை மாற்றிக்கொண்டு போனால் போதுமா? இல்லை உங்கள் உடல் பலத்தை அதிகரித்துக் கொண்டு செல்ல வேண்டுமா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

கீழ்கண்ட ஏதாவது ஒரு விஷயத்தையோ பல விஷயத்தையோ நீங்கள் பின்பற்றினால் வாஸ்து பற்றி கவலைபட வேண்டாம்..!

மந்திர ஜபம் : தினமும் குரு உபதேசித்த மந்திரத்தை ஜபம் செய்பவராக இருக்க வேண்டும். அல்லது பாராயண மந்திரம் என சொல்லப்படும் மந்திரம் சொல்பவராக இருத்தல் வேண்டும்

தியானம் : தினமும் இறைவனின் மேல் தியானம் செய்பவராக இருத்தல் வேண்டும்.

தான தர்மம் : வருடம் ஒரு முறையாவது தானம் செய்பவராக இருத்தல் வேண்டும்

யாகம் : வருடம் ஒரு முறை வீட்டில் வேள்வி நடத்த வேண்டும்.

குரு அம்சம் : குருவின் ஆசி பெற்ற அவரின் உடை, ஜபமாலை, பாதுகை, குடை , பிரசாதம் ஏதேனும் ஒன்று பூஜையில் இருத்தல் வேண்டும்.

இவை அனைத்தும் ஆற்றலை மேம்படுத்தும் கருவிகள். இவைகள் இருந்தால் வாஸ்து கோளாரு என்ன எந்த கோளாரும் ஒன்றும் செய்யாது.

இதற்கு மேலும் இவையெல்லாம் எனக்கு தெரியாது, ஆற்றல் மேம்படுத்த முயற்சிக்கவும் மாட்டேன் என நீங்கள் சொன்னால் வாஸ்து சாஸ்திர நிபுணரை அழைத்து உங்கள் வீட்டின் மூலையையும் என்னிடம் வந்து உங்கள் மூளையையும் சரிசெய்து கொள்ளுங்கள்.


(வாஸ்தவமானது)

ஓம் தத் சத்

Tuesday, August 11, 2015

வாஸ்து கோளாறு - பகுதி 2

வாஸ்துவுக்கு நீங்கள் தோஸ்து இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. வாஸ்து என்ற கட்டிடக்கலை மேல் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அதை வைத்து எதிர்கால பலன் கூறி இதில் வாழ்பவன் இப்படி இருப்பான் என சொல்லுவது முட்டாள் தனம் என்பதே என் கருத்து. காரணம் வாஸ்து விதிகள் ஆட்களுக்கு ஏற்ப மாறுவதில்லை. வீட்டின் தன்மை வாஸ்து அடிப்படையில் இருந்தால் அதில் வாழ்பவன் யாராக இருந்தாலும் பலன் இருக்கும் என கருத்து நிலவுகிறது. இந்த பொது தன்மை தான் வாஸ்து விதிகளுக்கு முரணாக இருக்கிறது.


முக்கியமாக வாஸ்து பார்ப்பதே பணம் சேர்க்கத்தான் என்பதை போல பெரும்பான்மையான வாஸ்துகாரர்களில் வழிகாட்டுதலும் இருக்கிறது. 2010ஆம் வருடம் வரை தென்னகத்தில் ஆந்திராவில் இருந்து வாஸ்து நிபுணர்களின் படை மேலோங்கி இருந்ததும், திருப்பதி வாஸ்து அடிப்படையான கோவில் அதனால் தான் அங்கே பணம் கொட்டுகிறது என்ற புரளியும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

திருமணம் தடை உள்ள வாஸ்து அமைப்பு, குழந்தை பாக்கியம் பெற வாஸ்து அமைப்பு, நோய் இல்லாமல் வாழ வாஸ்து அமைப்பு என சொன்னாலும் அடிப்படையில் செல்வம் சேரும் வாஸ்து அமைப்பு என வாஸ்து பார்ப்பதன் நோக்கம் முற்றிலும் பணம் சேர்க்கும் சுய நலம் தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த சுயநல தன்மையை வாஸ்து நிபுணர்கள் ஊதி பெரிதாக்கி நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

குரு கிடைக்க வாஸ்து அமைப்பு, ஆன்மீக முன்னேற்றம் செய்ய வாஸ்து அமைப்பு, தினம் தினம் ஆன்மீக பயிற்சி தடையில்லாமல் செய்ய வாஸ்து அமைப்பு, முக்தி அடைய வாஸ்து அமைப்பு உண்டா என உங்கள் வாஸ்து நிபுணரிடம் கேட்டு சொல்லுங்கள்...!


வாஸ்துவால் எனக்கு பொருள் வேண்டாம் ஐயா... வாஸ்துவால் இறைவனின் அருள் பெற செய்யுங்கள் அவரிடம் பொருள் கேட்டு கொள்கிறேன் என சொல்லிப் பாருங்கள். வாஸ்து நிபுணர் உண்மையாக மாயனை பின் பற்றுவார்..மாயமாகிவிடுவார்.

வாஸ்து கட்டமைப்புகள் கோவில்களுக்கும் உண்டு. ஸ்தபதிகள் வாஸ்துவை பின்பற்றுவதும் அதன் குறிப்புகள் தமிழ் ஆகம விதிகளிலும் இருப்பதை காணலாம். தற்காலத்தில் வாஸ்து நிபுணர்கள் மனையின் மையத்தில் கட்டிடம் கட்ட கூடாது, அது பிரம்ம ஸ்தானம் இறைவனுக்கான இடம் என்கிறார்கள். ஆனால் கோவில்களின் நில அமைப்பின் மையத்தில் கூட கட்டிடம் கட்டப்படுவதில்லை. இறைவனின் சன்னிதானத்தை கோவிலின் மையத்தில் நாம் வைப்பதில்லை. பணம் கொட்டும் திருப்பதி கோவில் கூட அப்படி அமையவில்லை என்பது தான் உண்மை..! (பார்க்க படங்கள்.)

திருப்பதி - ஆந்திர பிரதேசம்

மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் - திருவண்ணாமலை

ஆனால் பிற மதக்கோவில்கள் பிரம்ம ஸ்தானத்தில் கட்டபட்டுள்ளன. சீக்கியர்களின் தங்கக்கோவில், கம்போடியாவின் அங்கோர்வார்ட் கோவில் ஆகியவை இதற்கு உதாரணம்.

 அங்கோர்வார்ட் - கம்போடியா
 குருத்வாரா - பஞ்சாப்

தமிழ் கலாச்சாரத்தில் மனையடி சாஸ்திரம் என்ற வழக்கம் இருந்தது. இன்று கூட காலண்டரின் பின்பக்கம் 12க்கு 16 அடி என சொல்லி அதற்கு பலன் எழுதி இருப்பதை பார்க்கலாம்.

மனையடி சாஸ்திரம் அந்த காலத்தில் குழி என்ற கணக்கில் பயன்படுத்தப்பட்டது. எந்த குடும்பத்திற்கு வீடு கட்டுகிறோமோ அந்த வீட்டு தலைவனின் கால் அடியை (குழி கணக்கை) எடுத்து அளவுகோலாக கொண்டு கட்டிடம் கட்டினார்கள். இதனால் பாரம்பரிய வீடுகள் நிலைத்து அடுத்த தலைமுறைக்கு சென்றது. மேலும் வேறு குடும்பங்கள் அதில் வசிக்கும் பொழுது அளவீடுகள் மாறுவதால் அவர்களுக்கு ஒத்துவராது. தற்காலத்தில் கட்டிடகலை வல்லுனர்கள் மனையடி சாஸ்திரத்தை பின்பற்றினாலும் பொதுவான அளவையே வைக்கிறார்கள். அதனால் மனையடி வேலை செய்யுமா என ஆய்வு செய்ய வேண்டும்.

எளிமையாக சொன்னால் தையல்காரரிடம் நம் அளவுக்கு தைத்த ஆடை பிறருக்கு பொருத்தமாக இருக்காது அல்லவா அது போல மனையடி சாஸ்திரம் என்பதும் அப்படிப்பட்டதே ஆகும்.

வாஸ்து என்பது பழங்காலத்தில் இருந்து இருக்கிறது அதனால் பின்பற்ற வேண்டும் என கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. என் முப்பாட்டன் கிணற்றில் நீர் இறைத்து குளித்தார் என்பதால் நானும் கிணறு வெட்டி அதில் குளிக்க வேண்டுமா? ஆழ்துளை நீர் எடுத்து மோட்டார் மூலம் குளிக்கலாமா என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

16 நிலை கோபுரம், 11 நிலை கோபுரம் என கட்டிடம் கட்டிய கலை கொண்டவர்கள் தமிழ் மன்னர்கள். ஆனால் அவர்களின் அரண்மனையை பல்வேறு நிலை கோபுரம் போல கட்டிக்கொள்ளவில்லை. இது ஏன்? மனித உடல் பூமியின் இயக்கத்துடன் ஒட்டி இருக்க வேண்டும் என்பதே இதன் காரணமாகும். பலமாடி கட்டிடம் கட்டி அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் வாஸ்து பார்க்கலாமா என யோசிக்க வேண்டும்.
மேலும் கிழக்கு சென்று வடக்கு திரும்பும் படிக்கட்டு நல்லதா வடக்கு சென்று மேற்கு திரும்பும் படிக்கட்டு நல்லதா என பல மாடி கட்டிடம் கட்டுபவர்கள் வாஸ்து பார்க்கிறார்கள்.

வீட்டின் மேல்மாடி கட்டினாலும் அந்த இடம் பரண் என பொருட்கள் சேமித்துவைக்கும் இடமே தவிர வாழும் இடமாக பயன்படுத்தவில்லை. அதற்கு படிகட்டும் ஒரே நேர்கோடாக இருக்கும். தற்கால அப்பார்ட்மெண்ட் விளம்பரத்தில் கூட வாஸ்து சாஸ்திரம் அடிப்படையில் என விளம்பரம் செய்கிறார்கள். இக்கருத்து எல்லாம் பாரம்பரிய வாஸ்துவில் சேர்க்க முடியுமா?

50 ஆண்டுகளுக்கு முன்புவரை கழிவறை என்ற அமைப்பு இல்லை. சுகாதாரத்தின் காரணமாக நம் முன்னோர்கள் கழிவறையை வீட்டின் உள்ளே அமைத்ததில்லை. வாஸ்து நிபுணர்களோ மாயன் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிட்டபடி கழிவறையும் செப்டிக் டாங்கும் வீட்டில் எங்கே அமைய வேண்டும் என விளக்குகிறார்கள். மாயன் குறிப்பில் உங்கள் வெஸ்டன் டாய்லட் எந்த திசை பார்த்து இருக்கும் என எழுதப்பட்டிருக்கிறதா? அவர் அட்டாச்டு பாத்ரூம் எந்த மூலையில் அமைய வேண்டும் என்பதை எந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்? சுட்டிக்காட்டினால் நான் உங்களுக்கு கடமைப்பட்டவனாவேன்.

வாஸ்து நிபுணர்களிடம் நான் கேட்க விரும்புவது இது தான்.

1) நம் முன்னோர்கள் வசித்த வீட்டின் அமைப்பு பெரும்பாலும் தனி வீடு. பிற வீட்டின் சுவற்றுடன் இணைந்திருக்காது. தற்காலத்தில் நெருங்கிய அமைப்பில் வீடும், அப்பார்ட்மெண்டும் உள்ளது. அப்படியானால் அடுக்குமாடி வாஸ்து என்பது பாரம்பரியமாக உண்டா? ஆம் எனில் வாஸ்து சாஸ்திர நூலை சுட்டிக்காட்டுக. இல்லை எங்கள் அனுபவத்தில் ஆய்வு செய்தோம் என்றால் அந்த ஆய்வை வெளியிடுக.

2) கழிவறை வாஸ்து சாஸ்திரம் உண்டா? கழிவறையில் எந்த திசை பார்த்து மலம் கழிக்க வேண்டும் என சொல்லுவதும் வாஸ்து அடிப்படையிலா?

3) முற்றிலும் 100% வாஸ்து கொண்ட வீடு என ஒன்றை காட்ட முடியுமா?

4) அக்னி மூலையில் குறை உள்ள ஒரு வீட்டில் ஒருவர் குடி இருக்கிறார். அதனால் அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அவர் காலி செய்த பின் மற்றொருவர் குடிவந்தால் அவருக்கும் அதே பாதிப்பு வருமா? எளிமையாக கேட்பதானால் வாஸ்து குறைபாடு ஒரு வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு இருப்பது போலவே அனைவருக்கும் இருக்குமா? அல்லது ஆளுக்கு ஆள் மாறுபடுமா?

5) ஊட்டி,கொடைக்கானல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கும் இதே வாஸ்து விதிகள் தானா? மாயன் குறிப்பில் இதன் அடிப்படை ஏதேனும் உண்டா?

இச்சமயம் கேள்வி இவ்வளவு தான். வாஸ்து நிபுணர்கள் பதில் அளிக்கலாம். அல்லது நீங்கள் அவர்களிடம் கேட்டு கூறலாம்.

மேற்கண்ட கருத்தை எல்லாம் படித்து நான் வாஸ்து விரோதி என முடிவுகட்டிவிடாதீர்கள். வாஸ்து பயன்படுத்தலாமா? வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் வசித்தால் என்ன செய்ய வேண்டும் என பல தகவல்களை விளக்குகிறேன்.

(வாஸ்து வளரும்)

Friday, August 7, 2015

வாஸ்து கோளாறு...!


சில வருடங்களாக பேச வேண்டும் என நினைத்த தலைப்பு வாஸ்து. இது சாஸ்திரம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது.


பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கூறப்பட்ட விஷயம் வாஸ்து, இது தேவலோகத்தின் சாஸ்திர விற்பன்னர் மாயன் வடிவமைத்தது என சொல்லப்படுகிறது.

ஸ்லோக வடிவில் இன்றும் மாயனின் வரிகள் வாஸ்துவை பற்றி இருக்கிறது என்பது உண்மை. ஆனால் இன்று மாயனின் வாஸ்து முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

வாஸ்துவை பற்றி தெரிந்துகொள்ளும் முன் சாஸ்திரம் என்றால் என்ன என தெரிந்து கொள்ளுவோம். சாஸ்திரம் என்பது தற்காலத்தில் தொழில் நுட்பம் என அழைப்படுகிறது. ஒரு விஞ்ஞான விஷயம் முழுமையான மெய்யுணர்வுடன் முடிவு நிலையை அடைந்தால் அது தொழில் நுட்பம் என அழைக்கலாம்.

சாஸ்திரம் என்பது இடம், மொழி, இனம் மற்றும் காலம் இவை கொண்டு மாறாமல் ஒன்று போல இருந்தால் அது (தொழில் நுட்பம்) சாஸ்திரம் என கூற வேண்டும். உதாரணமாக கணிதம் என்பது சாஸ்திரம், அதன்படி இரண்டை இரண்டால் பெருக்க நான்கு என விடைவரும் அல்லவா? எந்த நாட்டில் உள்ளவர்களும், எந்த சூழலிலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், என்ன மதமாக இருந்தாலும் இந்த விடை வரும். அப்படி இல்லாமல் என் ஜாதிக்காரன் கணிதம் செய்தால் தன் வரும் என சொன்னால் அது சாஸ்திரம் ஆகாது...!


மேலும் உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகம் மற்றும் பன்னிரு ராசியை வைத்து சொல்லும் விதிகள் உலகின் அனைத்து மனிதனுக்கும் பொதுவானது, மாறாது..! யோக சாஸ்திரமும் அப்படித்தான் அதனால் தான் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

அப்படியானால் வாஸ்து என்ற ஒரு விஷயம் தற்சமயம் அனைவருக்கும் ஒன்றாக இருக்கிறதா? அனைத்து நாட்டினரும், இன மொழி வேறுபாடு இன்றி பயன்படுத்த முடியுமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்...!

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என மாயனின் குறிப்பில் உள்ள விஷயம் கட்டட கலை தத்துவம் வடமொழியில் இருக்கும் சுவடி என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பஞ்ச பூதங்கள் மற்றும் அஷ்ட திக் பாலகர்கள் ( எட்டுதிசை காக்கும் தேவர்கள் ) இவர்களின் சக்தியை சம நிலைப்படுத்தும் முறையில் அமைந்த கட்டட கலை தத்துவம் வாஸ்து என மாயன் வரையறை செய்தார்.

ஒரு திறந்த வெளியில் பஞ்ச பூதங்கள் பிரச்சனைகள் இல்லாமல் இயங்கியது. ஒரு சுவர் அந்த இடத்தில் எழும்பினால் அங்கே இத்தனை நாள் சுழன்ற காற்று தடைபடுகிறது, மண் பாரம் சுமக்கிறது, வெளி (ஆகாயம்) நிரப்பப்படுகிறது. பஞ்சபூதத்தின் இயல்பு மாற்றப்பட்டு  சமநிலை தவறுகிறது. பஞ்சபூதத்தின் சமநிலை தவறாமல் எட்டு திசைகளுடனும் இணைந்து செயல்பட சில அடிப்படை விதிகளால் உருவாக்கப்பட்ட விஷயமே வாஸ்து.

வீடு எப்படி கட்டி எழுப்புவது, கொட்டகைகள், யாக சாலைகள், கோசாலைகள் எப்படி அமைப்பது என்பதை மாயன் வாஸ்து கூறுகிறது.

ஆனால் தற்சமயம் வாஸ்து எப்படி பயன்படுத்துகிறார்கள்? உங்கள் தொழில் சரி இல்லையா? குபேர மூலை உயர்வாக இல்லை- உயரமாக கட்டுங்கள்.. உடலில் நோயா வாயு மூலை சரி இல்லை அதை திறந்து வையுங்கள் என மனித வாழ்வுக்கும் வீட்டின் அமைப்புக்கு மூடிச்சு போடுவது சரியான முறையாக இருக்குமா என யோசிக்க வேண்டும்.

ஒரு மனிதன் பலவருடங்களாக வாழ்ந்து வரும் வீடு. அவருக்கு சென்ற வருடம் முதல் சில துன்பகரமான சம்பவம் நடக்கிறது. என் பிரச்சனைக்கு என்ன காரணம் என்ன என கேட்டால் உங்களின் ஜல மூலையில் சமையல் அறை இருக்கிறது அதை சரி செய்யுங்கள் என கூறும் வாஸ்து நிபுணர்கள் பெருகிவிட்டார்கள்.

இத்தனை வருடம் அங்கே தானே இருந்தார் அப்பொழுது இந்த ஜல மூலை ஏன் ஒன்றும் செய்யவில்லை என கேட்டால் அதுக்கு பதில் இருப்பதில்லை. பிரச்சனை உள்ளவர் எதை தின்றால் பித்தம் தெளியும் என இருப்பதால் இவையெல்லாம் யோசிக்காமல் வீட்டின் ஜல மூலையை இடித்து கட்ட துவங்கி இருப்பார்...!

சுப்பாண்டியின் உறவினர்கள் அவனுக்கு விலை உயர்ந்த பட்டு  துணியை பரிசாக அளித்தார்கள். அந்த துணியில் சட்டை தைக்க ஒரு தையல் கடையை அனுகினான். அங்கே இருந்த பையன் அப்பொழுது தான் தையல் பழகி வந்தான். சுப்பாண்டியின் முகத்தை பார்த்தவுடன் இவர் துணியில் சட்டை தைத்து பழகலாம் என முடிவு செய்தான். பையனிடம் துணியை கொடுத்து தனக்கு வேண்டிய டிசைனையும் சொல்லிவிட்டு வந்தான் சுப்பாண்டி.

சில நாட்கள் கழித்து சென்று சட்டையை வாங்கி போட்டு பார்த்தான் . சட்டை அஷ்ட கோணலாக தைக்கப்பட்டிருந்தது. பையன் நன்றாக தையல் பழகி இருந்தான். ஒரு தோள்பட்டை மேலும் மற்றது கீழுமாகவும், ஒரு கை மார்புக்கு அருகிலும் மற்றது முதுகுபுறத்திலும் இருந்தது. கழுத்துபட்டை பறவை இறக்கை போல மேலே எழும்பி இருந்தது. சிரமப்பட்டு போட்டுக்கொண்டு சுப்பாண்டி தையல்கடை பையனை பார்த்து இது ஏன் இப்படி இருக்கு என கேட்டான்..!

பையன் தான் தவறாக தைத்ததை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. சுப்பாண்டியிடம் எல்லாம் சரியாக இருக்கிறது இது நவீன டிசைன், உங்களுக்குத்தான் ஸ்டைலாக நிற்க தெரியவில்லை என சொல்லி தோள்பட்டையை இப்படி இறக்கி, கைகளை முன்புறமாக வளைத்து வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாக இருக்கும் என சொல்லி காசுவாங்கி கொண்டு அனுப்பி வைத்தான்.

இடுப்பை ஒருபுறம் வளைத்து, கைகளை முன்புறம் நீட்டி, தோள்பட்டையை சரித்து சுப்பாண்டி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் வந்த ஒருவர், “சார் ஒரு நிமிஷம் நில்லுங்க, இந்த சட்டை எங்க தைச்சீங்க?” என கேட்டார். சுப்பாண்டிக்கு நிலைகொள்ளவில்லை...! பூரிப்புடன், ” ஏன் சார் கேக்கறீங்க சட்டை அம்சமா இருக்கா? “ என கேட்டான். வந்தவர் “அது இல்லைசார் உங்களை மாதிரி மாற்று திறனாளிக்கே இத்தனை அம்சமா தைச்சிருக்கானே, எனக்கேல்லாம் இன்னும் சூப்பரா தைப்பான்னு தான் கேட்டேன்...!” என்றார் அவர்.

இப்படித்தான் நம் நிலமையும் இருக்கிறது. வாஸ்து பார்ப்பவர்கள் மாற்றி கட்டிய வீட்டில் செளவுகரியம் இல்லாமல் சுப்பாண்டி வளைந்து போட்டு கொண்டு நடந்த சட்டையை போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்படியானால் வாஸ்து பார்க்கலாமா கூடாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது...

காளை மாட்டை தொழுவம் மாற்றி கட்டினால் கன்று போடுமா? என சிந்தியுங்கள் பிறகு வாஸ்துவை பற்றி அலசுவோம்.

(வாஸ்தவம் தொடரும்)